அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு லட்சுமணனை காப்பாற்றியது போல பிரேசில் மக்களின் உயிரைக் காக்க இந்தியா மருந்து தர வேண்டும் என பிரேசில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்சுக்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத போதிலும் மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் பல இம்மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது.
இதனால் நோயின் தாக்கம் சமூகபரவலை எட்டிய நாடுகள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். ஒவ்வொரு நாடும் தங்களுக்கே உரிய பாணியில் மருந்துகளை கேட்டு கோரிக்கை விடுக்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருந்து கேட்டு மிரட்டல் விடுத்த நிலையில், பிரேசில் அதிபர் ராமாயணம் மற்றும் பைபிளை மேற்கோள்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இராமாயணப் போரில் மயங்கி விழுந்த லட்சுமணனின் உயிரைக் காப்பாற்ற அனுமன் இமயமலையில் இருந்து சஞ்சீவி மருந்து எடுத்து சென்றது போன்றும், உடல் நலிவுற்றவர்களை இயேசுநாதர் குணப்படுத்தியது போன்றும் பிரேசில் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய சிக்கலான கொரோனாவை இந்தியாவும், பிரேசில் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என பிரேசில் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.