சுரங்க பணியாளர்களை ஏற்றி சென்ற அலுவலகப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டில் அப்ருனிமெக் மாகாணத்தில் ஹடபம்பாஸ் என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரில் காப்பர் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த காப்பர் சுரங்கத்தில் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காப்பர் சுரங்கத்தில் கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல் வேலை முடிந்ததும் ஊழியர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு அலுவலகப் பேருந்து ஓன்று சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தப் பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.