பேருந்தில் கஞ்சா கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நிலையில் பள்ளிகொண்டா அருகாமையில் வந்த போது டிக்கெட் பரிசோதனை செய்கின்ற உமாபதி பஸ்சில் பயணிகளிடம் பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஒருவரிடம் டிக்கெட்டை காட்டும் படி கேட்டுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த பெரிய பையை திறக்கும் படி கூறியுள்ளார். அதற்கு பயனாளி பூட்டு சாவி தன்னிடம் இல்லை எனவும் தனது முதலாளியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து டிக்கெட் பரிசோதனை செய்பவர் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் பின் அவரிடம் துணை காவல்துறை சூப்பிரண்டு சரவணன் விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் அவர் முகமது கவுஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது கவுஸை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.