இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யச் சென்ற மாணவர்கள் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 150பேர் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நேற்று முன்தினம் அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்தனர். ஆற்றில் இருந்த அளவுக்கதிகமான நீர் மற்றும் பாறைகளுக்கு நடுவே மாணவர்கள் ரயில் பெட்டியை போல கைகோர்த்துக்கொண்டு மறு கரைக்குச் செல்ல 21 மாணவர்கள் முயற்சி செய்த நிலையில் ஒரு மாணவர் கால் தவறி ஆற்றிற்குள் விழுந்ததார் .
இதை தொடர்ந்து அடுத்தடுத்து மொத்தமாக 20 மாணவர்களும் ஆற்றுக்குள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். மாணவர்களின் கூச்சல் சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் மாணவர்களை மீட்க வந்ததோடு, மீட்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும் அங்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரப்பர் படகை வைத்து பல மணி நேரம் நடந்த இந்த மீட்பு பணியில் 10 மாணவர்கள் உயிரோடும், 11 சடலமாகவும் மீட்கப்பட்டனர். உயிரோடு மீட்கப்பட்ட மாணவர்கள் சுயநினைவை இழந்த நிலையில் அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்றை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.