மூதாட்டியிடம் இளம்பெண் சூழ்ச்சி செய்து சங்கிலியை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்வபுரத்தில் அமிர்தராஜ் என்பவர் தனது மனைவியான ஜெயாவுடன் வசித்து வருகிறார். ஜெயா உடன்குடியில் இருந்து நெல்லைக்கு செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது ஜெயா அமர்ந்திருந்த சீட்டுக்கு பின்னால் இருந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அவரிடம் உங்களது சங்கிலி கழன்று விழுவது போல் உள்ளது என்றும் அதனை பாதுகாப்பாக பையில் எடுத்து வைத்துக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார்.
இதனால் ஜெயா தனது கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை கழற்றி, தான் வைத்திருந்த கைப்பையில் போட்டுள்ளார். நாசரேத் அருகே அந்த பேருந்து சென்று கொண்டிருக்கையில் திடீரென தனது கைப்பையை பார்த்த ஜெயா, அந்தப் பை பிளேடால் வெட்டப்பட்டு அதில் இருந்த 3 பவுன் சங்கிலி திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பின்னால் திரும்பி அந்த இளம் பெண்ணைப் பார்த்த போது அவர் அங்கு இல்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து ஜெயா நாசரேத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.