பேருந்தில் பணம் திருட முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை மற்றும் பணம் திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் ஆடி மாதம் பெண்கள் அதிகமாக கோவிலுக்கு செல்வதால் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு மொழி புறப்பட்ட அரசு பேருந்தில் இரண்டு பெண்கள் பயணிகளின் கைப்பையை திறந்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளனர்.
இதனை பார்த்த டிக்கெட் பரிசோதகர் ஒரு பெண்ணை பிடித்துள்ளார். மேலும் அவருடன் இருந்த மற்றொரு பெண் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பிடிப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.
மேலும் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் எனக்கும் அந்த திருட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னுடன் வந்த பெண் தான் திருட முயன்றார் என கூறியுள்ளார். எனினும் காவல்துறையினர் அந்தப் பெண்ணை விடவில்லை. மேலும் அந்த பெண்ணிற்கு திருட்டு சம்பவத்தில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய பெண்ணையும் வலை வீசி தேடி வருகின்றனர்.