பேருந்து டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் என பலர் பயணம் செய்துள்ளனர். அதன்பின் வக்காரமாரி என்ற இடத்திற்கு அருகில் வந்த நிலையில் பேருந்தின் பின்பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பேருந்தின் டயர் வெடித்த வேகத்தில் தரைதளத்தில் போடப்பட்டிருந்த பிளைவுட் உடைந்து சிதறியதால் அதன் மேல் இருக்கையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இதைப் பார்த்த சக பயணிகள் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.