கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பேருந்து ஒன்று வனப்பகுதிகளில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சேத்தாண்கள்ளி பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கேரட்டி கிராமத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் பேருந்து அஞ்செட்டி வடபகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் 9 பேருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட பலத்த காயமடைந்து உள்ளதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.