உக்ரேனில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படையினர் நெருங்கி வருவதோடு தலைநகரான கிவ்வை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றது. அதேவேளை மரியுபோல் நகரிலும் ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. அதன் பலனாக உக்ரைனில் சில பகுதிகளில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இவ்வாறு போர் நிறுத்தம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு, மனிதாபிமான உதவிகள் செய்யவும் ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து அகதிகளாக வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து பெஸ்காரா பகுதியை நோக்கி 22 அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் அவரது குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தை அடுத்து அகதிகள் அனைவரும் அருகில் உள்ள காவல்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் ஓய்வெடுத்த பின் தங்களது பயணத்தை தொடங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.