வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்க்கு இயக்கப்பட்டு வந்த 35 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும்தான் கார், பேருந்துகள் போன்ற வண்டிகள் இயங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் அடங்கி இருக்கக்கூடிய வேலூர் மண்டலத்தில் இருந்து திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பிற மாவட்டங்களில் இருந்து வேலூர் வழியாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்டு வந்த 23 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 35 அரசு பேருந்துகள் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது.