திருப்பத்தூர் மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் தலைமை தாங்கினார் மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து கலெக்டர் சிவன் அருள் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் பேட்டி கொடுத்தபோது, மேகதாது அணை கட்டுவதற்கு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியும் மற்றும் ராணிப்பேட்டையில் ஒரு மருத்துவக் கல்லூரியும் அமைப்பதற்கு முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திரு. துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.