பஜார் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
ஆம்பூரில் இருக்கும் பஜார் பகுதியில் சுயம்பு நாகநாதசுவாமி கோவில் மாட வீதியில் புதிதாக மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் யாரும் இறந்தால் கோவில் நடை சாத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலில் விழாக்கள் நடைபெறும் போது கூட்டம் அதிகமாக கூடுவதால் மருத்துவமனையில் நோயாளிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதியில் மருத்துவமனை இயங்கக் கூடாது என ஆம்பூரில் வசிக்கும் அனைத்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன் படி ஆம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியன் போன்றோர் கோவில் மற்றும் மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பு பணி போடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கோவில் அருகாமையில் தனியார் மருத்துவமனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ச்சுனன் சம்பத் தலைமையில் ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்துள்ளனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அர்ஜுன், சம்பத் ஆகியோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோவில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.