ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக கட்டாயமான முறையில் ஹெல்மெட் அணிந்து இருப்போருக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டத்தை ஜூன் 1 முதல் அமுல்படுத்த திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் சொன்னபடியே ஹெல்மட் அணிந்திருப்பவருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்ற திட்டத்தை இன்று முதல் தொடங்கி வைத்துள்ளனர். திருச்செந்தூரில் கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வருபவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மாதம் ஒருமுறை காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து வரும் முதல் 30 வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.