மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100 ஐ தாண்டி விற்பனையாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை 28 பைசா உயர்வுக்குப் பிறகு, அங்கு சில்லறை விற்பனைக்கு சேர்க்கைகளுடன் கூடிய பெட்ரோல் லிட்டருக்கு வீதம் ரூ 100 ஐ தாண்டியதாக கூறப்படுகிறது. அதன்படி ஊடகங்களிடம் பேசிய பர்பானி மாவட்ட பெட்ரோல் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அமோல் பெட்சுர்கர், பர்பானியில் சேர்க்கைகளுடன் கூடிய பெட்ரோல் விகிதம் ஒரு லிட்டருக்கு 100.16 ரூபாயை எட்டியுள்ளது.
இது போக்குவரத்துக்கு அதிக தூரம் இருப்பதால் செலவு அதிகம் என விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த செய்தி, அந்த மாநிலம் மட்டுமல்லாது நாடுமுழுவதுமுள்ள வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நேற்று பெட்ரோல், லிட்டர் 90.70 ரூபாய், டீசல் லிட்டர் 83.86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 90.96 ரூபாய்க்கும், டீசல் 30 காசுகள் அதிகரித்து லிட்டர் 84.16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கும் 100 ரூபாயை தொடும் காலம் வெகு தொலைவில் இல்லை என வாகன ஓட்டிகளின் புலம்பல்கள் கேட்காமல் இல்லை.