விழுப்புரம் அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின் மேலாளர் சீனிவாசன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியும், கத்தி அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். காவல்துறையினர் தங்களை நெருங்கி விட்டதை உணர்ந்த குற்றவாளிகள் அப்பு மற்றும் அசார் ஆகியோர் திருச்சி மற்றும் தாம்பரம் நீதிமன்றங்களில் தனித்தனியாக சரணடைந்தனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரித்த அதிகாரிகள் இரண்டு பேரிடமும் தனித்தனியாக மேற்கொண்ட விசாரணைக்குப் பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதில் அப்பு கொடுத்த தகவலின் பேரில் 5 பேரை ஏற்கனவே கைது செய்த காவல்துறையினர், அசார் கொடுத்த தகவலின் பேரில் நேற்றையதினம் 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலைக்கான காரணம் குறித்து 10 பேரிடமும் விசாரிக்கையில் பணம் கேட்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரகாஷிடம் பணம் கேட்டபோது அவர் இல்லை என்று கூறியதால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், ஆனால் ஆள் அடையாளம் தெரியாமல் சீனிவாசனை கொலை செய்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.