பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடகால் பஜனை கோவில் தெருவில் கணபதி- மகேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இவர்களுடைய மூத்த மகள் பரமேஸ்வரி அரசு கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இதில் இளைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இளைய மகள் சிறிது நாட்களாகவே கல்வி கற்பதில் கவனக்குறைவாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் கல்வி கற்பதில் கவனமாக இருக்க வேண்டும் என மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மனமுடைந்த இளைய மகளான 12-ம் வகுப்பு மாணவி தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் யாரும் இல்லாத நேரத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.