Categories
தேசிய செய்திகள்

பெற்றோர் வீட்டில் வசித்து வந்த மருத்துவர்… தூக்கிட்டு தற்கொலை…!!!

பெற்றோர் வீட்டில் இருந்தபடி மருத்துவராக பணியாற்றி வந்த திருமணமான இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பலரம்பூர்  என்ற பகுதியில் குஷ்பு சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் புனீத் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. குஷ்பூ தனது சொந்த ஊரிலேயே இருக்கின்ற அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் கணவர் புனீத் மும்பையில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், தனது மனைவி மற்றும் மகனை அடிக்கடி வந்து பார்த்து செல்வார். இந்நிலையில் குஷ்பூ நேற்று முன்தினம் பெற்றோர்களுடன் அமர்ந்து இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார். அதன் பின்னர் தன் மகனை அழைத்துக்கொண்டு தனது அறைக்குள் உறங்க சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து குஷ்புவின் மகன் அழுது கொண்டே வந்து தனது தாத்தா பாட்டியிடம் தாய் பற்றி ஏதோ கூற முயற்சி செய்துள்ளான்.

அதனால் பதறிய குஷ்புவின் பெற்றோர், உடனடியாக அவரின் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு குஷ்பூ தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், “குஷ்பூ அறையிலிருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவருக்கும் அவரின் கணவர் புனீத்துக்கும் எந்த சண்டையும் இல்லை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி குடும்பத்தாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |