அலுவலக ஊழியர்கள் பலருக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும்.
அதே போல் இபிஎப்ஓ சட்டத்தின்படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது. பத்தாண்டுகள் ஒருவர் கணக்கில் தொடர்ச்சியாக இத்தொகை செலுத்தப்பட்டு வந்தால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியதமாக கிடைக்கும்.
இதில் முக்கியமான ஒரு விஷயம் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு ஊழியரின் பெயரில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட உடன் ரூ.6 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டு விடுகிறது. இது ஒரு ஆயுள் காப்பீடு திட்டம். வேலையில் இருக்கும்போது திடீர் மரணம் ஏற்பட்டால் வாரிசுதாரர்களுக்கு இத்தொகை முழுவதுமாக தரப்படும்.