ஹாங்காங்கில் தொடரும் புயல் பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள புயல் காரணமாக அங்கு கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொம்பாசு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஹாங்காங் நகரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெய்த கன மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் காரணமாக அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், மற்றும் பங்குச் சந்தைகளுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த புயலானது மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகரின் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த கொம்பாசு புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.