இந்திய அணி கேப்டன் சக வீரர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தில் ரோகித் சர்மா இல்லாதது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை தொடரின் போது இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் சரியாக பேசிக் கொள்வது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாட இந்திய அணி அமெரிக்கா சென்று உள்ளது. அங்கு சக வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ரோகித் சர்மா இல்லாத நிலையில் ரசிகர்கள் எல்லாரும் அது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதற்கு முன்பாக இதே சம்பவம் நடைபெற்று அது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.