நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற இளைஞரின் செயலை சமூக வலைதளத்தில் பார்த்து ஒரு லட்சம் நிதியுதவி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுரையில் பிச்சை எடுத்து, தினமும் கிடைக்கும் 100 ரூபாயில் சாப்பிட்டது போக மீதி இருக்கும் பணத்தை சேர்த்து ஊரடங்கு சமயத்தில் நடமாடும் டீக்கடையை ஆரம்பித்துள்ளார். அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னைப்போல் ஆதரவற்ற ஏழைகளுக்கு தினமும் காலை, மாலை, இரவு என 30 உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் கொடுத்து வருகிறார். இந்த இளைஞரின் வைரல் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி கண்கலங்காதவர்களின் நெஞ்சையும் உருக வைத்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த வீடியோவை பார்த்து தற்போது அந்த இளைஞருக்கு ஒரு லட்சம் தருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ” இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்த்தால் வாழ்க்கையில் எந்த மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். என்னால் முடிந்த உதவியாக இவருக்கு ஒரு லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன். யாருக்கேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும். இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் நன்றி ” என பதிவிட்டுள்ளார்.