கொரோனா நிவாரண நிதிக்காக பிச்சை எடுத்த பணம் 10 ஆயிரம் ரூபாயை முதியவர் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழகத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு கொரோனா நிவாரண நிதி கொடுக்கலாம் என தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை தங்களுடைய பங்களிப்பு பணத்தை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்த 10 ஆயிரம் ரூபாயை முதியவர் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கினறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டி ஆவார். இவர் பல வருடங்களாக ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வருகின்றார். இவர் எடுக்கும் பிச்சை பணத்தை பல பள்ளிக்கூடங்களுக்கு உதவி அளித்து வந்துள்ளார்.
இதனையடுத்து சி.சி.டி.வி கேமரா, சுத்திகரிப்பு நீர், நாற்காலிகள் போன்றவற்றை பல பள்ளிகளுக்கு நன்கொடையாக பூல்பாண்டி வழங்கி இருக்கின்றார். எனவே தற்போது முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். இதனை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் பிச்சை எடுத்த பணத்தை பூல்பாண்டி அனுப்பியுள்ளார். இதைப்போன்று கொரோனாவின் முதல் அலையிலும் தான் அனுப்பியதாகவும், பேரிடர் சமயத்தில் அரசுக்கு பணம் அனுப்புவது சிறிய உதவியாக இருந்தாலும் தனக்கு ஆனந்தமாக இருப்பதாக பூல்பாண்டி தெரிவித்துள்ளார்.