பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரிக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் கொரோனா முதல் பலியை வாங்கியது பிலிப்பைன்ஸில் தான். அந்நாட்டில் தற்போது வரை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. அங்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி, அந்நாட்டில் கொரோனா பாதிப்படைந்த அவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,918 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று பலி எண்ணிக்கையும் 2600ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் உள்துறை மந்திரிக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் உள்துறை மந்திரியாக இருந்து கொண்டிருக்கும் எட்வர்டோ அனோவுக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் ஒரு மாதத்திற்கு பின்னர் குணம் அடைந்தார்.
அதன் பிறகு அவர் தொடர்ந்து தனது அரசுப் பணிகளை கவனித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக அவரிடம் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவர் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.