மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலைப் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பில்லூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் நீர்வரத்து அதிகரித்து காலை 8 மணிக்கு நீர்மட்டம் 90 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நான்கு மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மாவட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.