முறையாக திட்ட மிடப்படாமல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மைய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கடித நகலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய்யப்பட்ட மிகப்பெரிய தவறு, ஊரடங்கு உத்தரவின் போதும் செய்யப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். சேமித்து வைத்த பணத்தையும் வாழ்வாதாரத்தையும் அப்போது தொலைத்த ஏழை மக்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் வாழ்க்கையையே தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
விளக்கு ஒளி ஏற்றுவது போன்ற உளவியல் ரீதியான சிகிச்சைகள் பால்கனியில் இருக்கும் மக்களுக்கே தவிர, கூரை கூட இல்லாத மக்கள் என்ன செய்வார்கள் என்று அந்த கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தங்களது பால்கனிகள் எண்ணெய் விளக்குகளால் ஒளிரும் அதே நேரத்தில், அடுத்த வேளை ரொட்டிக்கு எண்ணெய் இன்றி ஏழைமக்கள் போராடுவதாகவும் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
பால்கனியில் இருக்கும் மக்களுக்காக பால்கனி அரசாங்கம் மட்டுமே தாங்கள் இருக்க விரும்ப மாட்டீர்கள் என தான் நம்புவதாக தெரிவித்துள்ள அவர், இந்த முறை தங்களது பார்வை தோல்வி அடைந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். உங்கள் மீது கோபம் இருந்தாலும் இன்னும் உங்கள் பக்கமே இருப்பதாக கூறி கடிதத்தை கமல்ஹாசன் நிறைவு செய்துள்ளார்.