பிராங்க் என்ற பெயரில் மக்களை தொல்லை செய்யும் விதமாக சிலர் துன்புறுத்தும் விதமாக வீடியோ எடுத்து அவர்களிடம் கேட்காமல் வெளியிடுகின்றனர். இதனை யூடியூபில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கலாம். ஆனால் இந்த ப்ராங்கை பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நடத்தி அவர்களின் சுதந்திரத்தை கெடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக இது போன்று பதிவிடுவது தனிமனித சுதந்திரத்தை கெடுக்கும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிராங்க் வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இன்றி யூடியூபில் பதிவேற்றினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை எச்சரித்துள்ளது. அதாவது, குறும்புத்தனமாக வீடியோ எடுக்கிறோம் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் பாதிப்பு உண்டாகும் வகையில் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது கோவை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். prank video என்ற பெயரில் பொதுமக்கள் சம்மதம் இன்றி அவர்களை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல் வேறு யாரேனும் நடந்து கொண்டாள் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.