தஞ்சாவூரில் இருந்து பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை தூக்கிக்கொண்டு வடமாநில கூலித்தொழிலாளி குடும்பம் பெங்களூருக்கு நடந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சோனு தஞ்சாவூரில் குடும்பத்துடன் தங்கி கடந்த 5 மாதங்களுக்கு முன் செல்போன் டவர் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால் வறுமையில் வாடியவர் பெங்களூருவில் தனது சகோதரரிடம் செல்ல முடிவு எடுத்துள்ளார். இதனையடுத்து சோனு தனது மனைவியுடன் பிறந்து 15 நாட்களான குழந்தை மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் தஞ்சாவூரில் இருந்து கரூர் வழியாக நடந்து பரமத்தி வேலூருக்கு வந்தனர்.
கைக்குழந்தையுடன் வடமாநில தொழிலாளி நடந்து செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதுடன் அவர்களை பெங்களூருக்கு வழி அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர்.