நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் வாசுகி நகரில் முத்து சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதித்யாராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யாராம், செல்வகுமார் மற்றும் அகிலேஷ் ஆகியோர் இணைந்து நண்பரான சூர்யாவின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் ஆற்றில் நண்பர்கள் அங்கு குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆதித்யாராம் நீரில் மூழ்கியுள்ளார். இதனைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் ஆதித்யாராமை காப்பாற்ற முயற்சிசெய்துள்ளனர். ஆனாலும் அவர்களால் ஆதித்தியாராமை காப்பாற்ற முடியாததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின்படி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய ஆதித்யாராமனின் உடலை போராடி மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதித்யாராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.