Categories
உலக செய்திகள்

பிரதமர் உட்பட மொத்த அமைச்சரவையும் கூண்டோடு ராஜினாமா…. பெய்ரூட் விபத்து எதிரொலியால் இந்த முடிவு …!!

பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் உள்ளிட்ட நாட்டின் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருக்கிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. அந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வலைகளால் 9 கிலோ மீட்டருக்கும் அப்பால் இருந்த பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து சிதறின. மேலும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இவ்வளவு ஆபத்து நிறைந்த அமோனியம் நைட்ரேட்டை ஆறு ஆண்டுகளாக துறைமுகத்தின் வைத்திருந்த பொறுப்பற்ற லெபனான் அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் போராட்டங்களில் இறங்கினர். மக்களின் போராட்டம் வலுவான நிலையில் லெபனான் அமைச்சரவையிலிருந்து நீதித்துறை அமைச்சர் மரியா கிளாடி நஜிம், பொருளாதாரத் துறை அமைச்சர் காசி வஸ்னி, தகவல் துறை அமைச்சர் மானல் அப்தெல், சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் டாமினஸ் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அமைச்சர்களுடன் சேர்த்து எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் பெய்ரூட் துறைமுக கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ஹசர் டயப் உள்ளிட்ட நாட்டின் மொத்த அமைச்சரவையும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது பற்றி பிரதமர் ஹசர் டயப் கூறுகையில், “நான் இப்போது பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன். அப்போதுதான் மாற்றத்திற்கான மக்களின் போரின் அவர்களுடன் இணைந்து நானும் போராட முடியும். அதனால் என் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். இனி இறைவன் லெபனானை காப்பாற்றட்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

லெபனான் கொரோனா ஊரடங்கால் பெரும் பொருளாதார சரிவை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மிகக்கடுமையாக பாதித்திருக்கிறது.லெபனான் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் லெபனான் பிரதமர் உள்ளிட்ட நாட்டின் மொத்த அமைச்சரவையும் பதவி விலகி இருந்தாலும், தற்போது நிலவிக் கொண்டிருக்கும் கடுமையான சூழ்நிலையில் தேவையான துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கு லெபனான் அரசு தவறியுள்ளதாக ஒரு சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

Categories

Tech |