மேகதாது குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரிக்கை விடுத்து காங்கிரஸ் சார்பாக மேற்கொள்ளப்படும் பாதயாத்திரைக்கு கர்நாடக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசாங்கம் காவிரியின் இடையில் மேகதாது அணையை கட்ட தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு, தமிழ்நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் சிவகுமார், மேகதாது அணை திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்து 168 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று காலையில் பாதயாத்திரை தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் முன்னாள் முதல்வரான சித்தராமையா போன்ற பல காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதனை பா.ஜ.க விமர்சனம் செய்திருக்கிறது. இதுகுறித்து, பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சரான அரகா ஞானேந்த்ரா தெரிவித்துள்ளதாவது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மேகதாது திட்டம் பற்றி கவலைப்படவே இல்லை.
தேர்தலுக்காக தற்போது பாதயாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள். அவர்களின் அரசியல் விளையாட்டை மாநிலத்தில் இருக்கும் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், கர்நாடக முதல்வரான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளதாவது, மக்களை முட்டாளாக்க அரசியல் நோக்கத்தோடு மேகதாது பாதயாத்திரை, காங்கிரஸால் தொடங்கப்பட்டிருக்கிறது. விதிமுறைகளை மீறி செயல்படுவதற்காக காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்.