Categories
அரசியல்

“இது ஆரம்பம் தான்!”…. மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்… அண்ணாமலை ஆவேசம்…!!!

தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீட்டு தொகை அளிக்கவும், தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

தஞ்சை மாவட்டத்தில் லாவண்யா என்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டின் பா.ஜ.க சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில், பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மாணவி தற்கொலை செய்த சம்பவம் மனம் பதறுகிறது. இந்த வழக்கில் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினையில் எதுவும் நடைபெறவில்லை என்பது போன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியிருக்கிறார்.

மேலும், மாணவி உயிரிழந்தது தொடர்பில் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் மாணவி என்னென்ன சித்திரவதைகளுக்கு ஆளானார் என்று தெரிகிறது. படிக்கக்கூடிய பள்ளியில் மாணவிக்கு இவ்வாறு கொடுமைகள் நேர்வது கண்டனத்திற்குரியது. மாணவி லாவண்யா, மதம் மாற ஒத்துக்கொள்ளாததால், பல கொடுமைகள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்திருக்கிறார்.

இதனைப் பார்த்துக்கொண்டு எவ்வாறு சும்மாயிருக்க முடியும்? எனவே தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக மாணவிக்கு நேர்ந்த கொடுமைகள், இதற்கு காரணமானவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்.

இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும். இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழக் கூடாது எனில், தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம். இந்த போராட்டம் ஆரம்பம் மட்டும் தான் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |