முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜகவினர் அடைக்கலம் கொடுத்தது தெரியவந்திருக்கிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் முன்ஜாமீன் கேட்டு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்.
எனவே, 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் சுமார் 20 நாட்களாக அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் ஹசன் சாலையில், ராஜேந்திர பாலாஜி ஒரு வாகனத்திலிருந்து இறங்கி வேறு வாகனத்தில் ஏற முயன்ற போது காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.
தற்போது, தனிப்படை காவல்துறையினர் ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மாவட்டத்திலுள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்ததாக அவரின் தங்கை மகனான கணேசன், விருதுநகரின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள பாண்டியராஜன் மற்றும் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இடம் கொடுத்த பாஜகவை சேர்ந்த கிருஷ்ணகிரியின் மேற்கு மாவட்ட செயலாளரான ராமகிருஷ்ணன், அவரின் உறவினரான நாகேஷன் போன்ற 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர், ராஜேந்திர பாலாஜி உள்பட அவர்கள் 5 பேரிடமும் சுமார் 3 மணி நேரங்களாக விசாரணை நடத்தியுள்ளனர். காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு பாஜகவை சேர்ந்தவர்கள் அடைக்கலம் கொடுத்திருப்பது உறுதியாகியிருக்கிறது.
எனவே, இதில் முக்கிய தலைவர்களும் சம்பந்தப்பட்டிருப்பார்களா? என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.