Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளைக்குள் விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 70% பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் எனவும்,முழுஉரடங்கு அறிவிக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால் ஊரடங்கை விரிவுபடுத்தும் திட்டம் ஏதேனும் அரசிடம் உள்ளதா?, தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதேனும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு எதையும் எடுக்கவில்லை என்றும் தமிழக குடிமக்கள் என்ற வகையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த கேள்விகளை கேட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு பிளீடர் அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார்.

எனவே நாளை இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்த உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கும் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |