Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்… விஜயபாஸ்கர் கோரிக்கை…!!!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை, நரிமேடு ஆகிய பகுதிகளில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணிய உரமாகும் மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகளால் பெரும்பாலானவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். பிளாஸ்மா தானம் மிகவும் பயனளித்துக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் அனைவரும் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன் வரவேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் பிளாஸ்மா தானம் செய்யலாம். சென்னையில் இதுவரை 57 பேருக்கும், மதுரையில் 7 பேருக்கும் பிளாஸ்மா தானம் வழங்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஏதுவாக சென்னையில் 2 கோடி மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் பிளாஸ்மா வங்கிகளை தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார். அதே சமயத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தில், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், அவசர சிகிச்சை பிரிவு போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் 300 படுக்கைகள் கொண்ட அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு வருகின்றது. அந்த மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட இருக்கின்றது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |