பிளாஸ்மா தானம் செய்ய முன்வருவோருக்கு ரூபாய் ஐந்தாயிரம் வெகுமதி வழங்கப்படும் என கர்நாடக மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் அரசின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கினையும் பலர் முறையாக கடைபிடிக்கின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை.
இது ஒருபுறமிருக்க பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என அதற்கான சிகிச்சை முறையை தற்போது மருத்துவர்கள் கையாண்டு வருகின்றனர். அதன்படி, பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு பலர் பூரண குணமடைந்து வரும் சூழ்நிலையில், பிளாஸ்மா எனும் சிகிச்சைமுறை கொரோனாவுக்கு நல்ல பலனை தருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை மருத்துவ நிபுணர்கள் கையிலெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதற்கு பிளாஸ்மா செல்கள் அதிகமாக தேவைப்படுவதால் அதனை தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தற்போது கர்நாடக மாநிலத்தில் பிளாஸ்மா தானத்தை அதிகரிக்க அதிரடி திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா தானம் வழங்கினால் ரூ5 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார். இதன் மூலம் நிறைய பேர் பிளாஸ்மா தானம் செய்ய முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
.