தற்காலிக சுகாதார பணியாளர்கள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை போடுவதற்காக பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெட்டியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தற்காலிக சுகாதார பணியாளர்கள் மனு ஒன்றை போட்டுள்ளனர். அந்த மனுவில் சுமார் 98 தற்காலிக சுகாதார பணியாளர்கள் கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருநாள் ஊதியமாக 600 ரூபாய் தருவதாக கூறி பணியில் சேர்த்து விட்டு இதுவரை சம்பளம் வழங்காமல் காலம் தாழ்த்துகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து தற்காலிக சுகாதார பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வழிவகை செய்யுமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.