11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் சென்றுள்ளனர். இந்த சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை பார்த்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவுக்கு மாற்றாக கண் விழித்திரை மூலமாக விற்பனை செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும், இடைநில்லா பயணப்படியும் வழங்க வேண்டும். இதனை தொடர்ந்து தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், காலியாக இருக்கும் 3500 விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 4ஜி மோடம் வழங்கவேண்டும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.