நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் அனைவரும் அமைதியான முறையில் கலந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நமது தமிழ்நாட்டில் வருகின்ற திங்கட்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதனை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கு தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது மழைக்காலம் என்பதால் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொள்முதல் செய்து கொண்டுவரப்படும் நெல் மழையில் நனைந்து வீணாகாதபடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அனைத்து அமைச்சர்களிடமும் வருகின்ற திங்கட்கிழமை நடைபெற இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் யாரும் ஆத்திரமூட்டும் அளவுக்கு செயல்பட்டாலும், அதற்கு அமைச்சர்கள் அமைதியுடன் பதிலளிக்க வேண்டும். மேலும் பொது இடங்களில் பேசுவது குறித்த குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதை மனதில் வைத்து சர்ச்சை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய நிர்ப்பந்தம் வரும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.