சேலம் மாவட்டம் பெரியப்புதூர் பகுதியில் வசித்துவரும் பெருமாள் – பார்வதி தம்பதியினரின் மகள் சுப்ரஜா. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதல் ஆண்டு படித்து வரும் இவர், ஏரோபிக்ஸ் விளையாட்டில் சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்துவரும் நிலையில், 17 வயதான சுப்ரஜா சிறுவயதிலிருந்தே கராத்தே, யோகா, ஏரோபிக்ஸ், பிட்நஸ், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறந்த வீராங்கனையாக விளங்கி வருகிறார். தான் பங்கேற்கும் போட்டிகளுக்கான செலவுகளுக்குத் தந்தையின் வருவாய் போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கும் சுப்ரஜா, இதுவரை பங்கேற்ற போட்டிகளுக்குப் பணம் திரட்ட தனது தந்தை கடுமையாக சிரமப்பட்டதாகக் கூறுகிறார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச ஏரோபிக்ஸ் போட்டியில் பங்கேற்குமாறு சுப்ரஜாவுக்கு அழைப்பு வரவே, அதற்கான பணத்தேவையைப் பூர்த்தி செய்ய அரசின் உதவியை அவர் நாடியுள்ளார். அங்கிருந்து சரியான உதவி கிடைக்காத நிலையில் தொழிலதிபர்கள், மருத்துவர்கள் சிலரின் உதவியுடன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் சுப்ரஜா.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள சுப்ரஜா, மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்கிறார். அரசின் உதவி கிடைக்கும் பட்சத்தில் தனது கனவை நனவாக்கி தேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்று அவர் ஊக்கத்துடன் சொல்கிறார்.