பிளஸ் 2 வேதியியல் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தமிழகத்தல் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது.
இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியானது நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் சுமார் 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்களுக்கு வசதியாக போக்குவரத்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே செய்துள்ளனர். சமூக இடைவெளி பின்பற்றி திருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஜூன் 23ம் தேதி நிறைவு பெறுகின்றன. எனவே பிளஸ் 2 தேர்வு முடிவானது ஜூன் மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பிளஸ் 2 வேதியியல் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.