மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூபாய் 2000 டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது 10 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 11வது தவணை வேண்டுமென்றால் e-kyc விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் பணம் வந்து சேராது. இதனை முடிப்பதற்கான கடைசி தேதி மே 31 ஆகும்.
11 தவணை பணமானது ஏப்ரல் முதல் ஜூலை வரை வெளியிடப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வரும் எனவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னும் பணம் வந்து சேரவில்லை. இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளின் ஒப்புதலும் அவசியமாகும். சில மாநில அரசுகள் 11வது தவணை பணத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் பலரும் நிதி உதவி பெற்று வருவதாக புகார் எழுந்து வருகிறது. அதன்படி நிலத்தை மற்றவருக்கு விற்றவர்கள், வருவாய் வரி செலுத்துவோர் உட்பட பலரும் நிதி உதவி பெற்று வருகின்றனர். எனவே இதுபோன்ற தகுதியற்றவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கான நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது. 1.5 லட்சம் விவசாயிகள் தங்களுடைய நிலத்தை விற்ற பிறகும் சட்டவிரோதமாக நிதி உதவி பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து இதுவரை பெறப்பட்ட நிதி உதவியை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.