இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தில் சொந்தமாக விவசாய நிலங்கள் இருப்பவர்கள் மட்டுமே இணைந்து கொள்ளலாம். இதனையடுத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். ஆனால் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவியில் இருக்கும் விவசாய குடும்பங்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், நிறுவன விவசாயிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பி.எம் கிசான் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்.
இந்தத் திட்டத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 3.15 லட்சம் தகுதியற்ற நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைந்தவர்களில் 6.18 லட்சம் பேர் ஆதார் விவரங்களை தவறாக கொடுத்துள்ளனர். இதன் காரணமாக தகுதியான நபர்களிடமிருந்து திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி செலுத்துபவர்கள், கணவன்-மனைவி 2 பேரும் சேர்ந்து நிதி உதவி பெறுதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவர்களை கண்டறிந்து திட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.