ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது டென்மார்க் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அரச முறைப் பயணமாக ஐரோப்பா சென்றிருக்கிறார். தற்போது பயணத்தின் இரண்டாம் கட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றிருக்கும் அவர் அந்நாட்டின் ராணியான இரண்டாம் மார்கிரேத்தை நேரில் சந்தித்துள்ளார். மேலும், இந்திய-நார்டிக் உச்சிமாநாடு நடந்து கொண்டிருப்பதால் அங்கு சென்று 4 நாடுகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்திருக்கிறார்.
அப்போது, பிரதமர் மோடி இந்தியா சார்பாக நினைவு பரிசுகளை தலைவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அந்த பரிசுகள் இந்திய நாட்டின் பல பிராந்தியங்களில் சிறப்பு வாய்ந்த வேறுபட்ட பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தின் சிறிய வெண்கல மரத்தை பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரினுக்கும், குஜராத் மாநிலத்தின் குட்ச் நகரத்தில் தயாரிக்கப்பட்ட துணியிலான ரோகன் ஓவியத்தை, டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத்துக்கும், குட்ச் நகரத்தின் சுவர் அலங்கார எம்பிராய்டரி கைவினைப்பொருளை, டென்மார்க்கின் பிரதமரான மெட்டே பிரடெரிக்சனுக்கும் வழங்கினார்.
மேலும், அலங்கார பெட்டிக்குள் காஷ்மீரின் பஷ்மினா சால்வையை வைத்து சுவீடன் நாட்டின் பிரதமரான மகதலேனா ஆண்டர்சனுக்கும், டென்மார்க் பட்டத்து இளவரசரான பிரடெரிக்கிற்கு சத்தீஷ்கார் மாநில டோக்ரா படகையும் அன்பு பரிசாக வழங்கினார்.