பாஜக, பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது குறித்து ஆளுநரிடம் முறையிட முடிவெடுத்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த போது, அவரது வாகன வரிசை செல்வதற்கு இடமில்லாமல் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மோடி சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக அங்கு காத்து நிற்க வேண்டிய நிலை உருவானது.
எனவே, அவரின் பாதுகாப்பு அங்கு கேள்விக்குறியானது. தற்போது இப்பிரச்சனை, பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. மேலும், காவல்துறையினர் பிரதமர் செல்லும் பாதையில், போராட்டம் நடப்பதை தடுக்க தவறி விட்டார்கள் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வரான, சென்னி இது பற்றி தெரிவித்திருப்பதாவது, “சாலை வழியில் பிரதமர் செல்வது திட்டமிடப்படவில்லை. திடீரென்று, பிரதமர் சாலை வழியில் செல்ல முடிவெடுத்தார்.
எனவே, அந்த சாலையில் பிரதமர் வருவது எதிர்பாராத ஒன்று. அதே நேரத்தில் பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும், முதல் நாள் நள்ளிரவு வரை நான் நேரில் சென்று பார்த்துவிட்டு தான் வந்தேன். உண்மையாக, பிரதமர் கலந்துகொள்ள இருந்த பொதுக்கூட்டத்தில் அதிக கூட்டம் இல்லாததால், பிரதமர் பாதுகாப்பை காரணம் கூறி கிளம்பி விட்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது, பாஜக இதனை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்றியுள்ளது. பஞ்சாப்பின் பாஜக தலைவரான அஸ்வனி சர்மா தலைமையில் பாஜகவினர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ஐ இன்று சந்தித்து இது குறித்து முறையிட இருக்கிறார்கள்.