16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நஞ்சேகவுண்டன்புதூரில் வசித்து வரும் ஓவியச்செல்வன் என்பவர் ஒரு சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஓவியச்செல்வன் சிறுமியை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் வழக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஓவியச்செல்வனுக்கும் சிறுமிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதும், அவர் சிறுமியை பழனிக்கு கடத்திச் சென்று திருமணம் செய்துக்கொண்டதும் தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் ஓவியச்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.