போதை மாத்திரை விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மாத்திரை விற்பனை அதிகமாக காணப்பட்டதால் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த போதை ஊசி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டமும் சாய்ந்தது. இதனால் போதை ஊசி விற்பனை குறைந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் போதை ஊசி விற்பனை அதிகத்திருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினருக்கு திருக்கோகர்ணம் பகுதியில் போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தன சேகர், சக்திவேல், ஹக்கீம் என்பதும் அவர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த போதைக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.