கொரோனா காலகட்டத்தில் கடன் ஏற்பட்டதால் அதனை அடைப்பதற்காக பாலியல் தொழிலாளி ஒருவர் பிரேசிலில் இருந்து பிரிட்டனுக்கு 1.2 கிலோ போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த Luan Irving Dos Santos Monteiro(31) என்ற பாலியல் தொழிலாளியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Heathrow விமான நிலையத்தில் வைத்து எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை பரிசோதனை செய்த பொழுது அவரது வயிற்றுக்குள் போதை பொருள் இருப்பதை ஸ்கேன் செய்து அதிகாரிகள் கண்டறிந்தனர். சுமார் 1.2 கிலோ கொக்கைன் போதை பொருளை சிறிய பொட்டலங்களாக கட்டி அவர் வயிற்றுக்குள் சேமித்து கடத்த முயன்றது தெரியவந்தது. அவர் பிரேசிலிலிருந்து பிரிட்டனுக்கு வருவதற்கு பதினோரு மணி நேரத்திற்கு முன்பே அந்த பொட்டலங்களை விழுங்கியுள்ளார்.
அதில் ஒரு பொட்டலம் உடைந்து இருந்தால் கூட அவர் நிச்சயம் உயிரிழந்திருப்பார் என்று பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் அவர் வயிற்றிலிருந்த கொக்கைன் போதைப் பொருளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் பவுண்டு என்று கூறப்படுகிறது. இதனை பிரிட்டனுக்கு கடத்த முயன்ற போதுதான் எல்லை பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் Monteiro தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
கொரோனா காலகட்டத்தில் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் அதிக கடன் வாங்கியதால் அதனை திருப்பி செலுத்த வேறு வழியில்லாமல் இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறினார் . இந்த கடத்தலை வெற்றிகரமாக முடித்திருந்தால் தனக்கு 2000 பவுண்ட் பணம் கிடைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது. அதில் பாதி ஆண்டுகள் பிரிட்டன் சிறையிலும், மீதி ஆண்டுகள் பிரேசில் சிறையிலும் தண்டனையை அனுபவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.