கொரோனா நோயால் பிரிட்டனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1725பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து காணொளி மூலம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன்,” பிரிட்டனில் ஏற்பட்ட இந்த மோசமான நிலைக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இதுவரை அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நான்தான் பொறுப்பு என்னை மன்னித்துவிடுங்கள்.
மேலும் கொரோனா நோயால் உற்றார் மற்றும் உறவினர்களை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களை நினைவுகூறும் நாம் அதே வேளையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்ற உயிர்களை காக்க போராடிய முன்கள பணியாளர்களை என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் அரசு இயன்றவரை தன் கடமையை செய்து வருகிறது. பிரிட்டனில் இதுவரை 6.8 மில்லியன் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்தும் போட்டுக் கொண்டவர்கள் கொரோனாவிலிருந்து இருந்து விடுபட்டவர்கள் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளனர் . மேலும் பிரிட்டனில் எட்டில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது” என்று கூறினார்.