கன்னியாகுமரியில் பொய்யாக இ- பதிவு பெறவேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரானா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறியபோது, வெளிமாநிலங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வாகனங்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் 1,500 பேர் இ-பாஸ் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்றும், 2,500 பேர் மருத்துவ சிகிச்சை இருப்பதாக சொல்லி இ-பாஸ் பெற்றிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.எனவே மருத்துவ அவசரம் என்று பொய்யாக கூறி இ-பதிவு பெற்று வெளியில் சுற்றித்திரிய வேண்டாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். இதனால் உண்மையாக மருத்துவ சிகிச்சைக்கு செல்லக் கூடியவர்கள் மீதும் எங்களுக்கு சந்தேகம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.