இந்தியாவில் டெல்லியில் உள்ள யமுனை நதியில் சத் பூஜையானது தீபாவளி பண்டிகைக்கு பிறகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பூஜையின் போது யமுனை நதியில் இடுப்பு அளவுக்கு இருக்கும் தண்ணீரில் மக்கள் இறங்கி சூரிய பகவானை நோக்கி விளக்கை காண்பிப்பார்கள். அதன் பிறகு யமுனை நதியில் தற்போது நச்சு நுரை அதிக அளவில் காணப்பட்டதால் சத் பூஜை செய்யும்போது பொதுமக்கள் எப்படி ஆற்றில் இறங்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதனால் பூஜையை முன்னிட்டு யமுனை நதியில் நச்சு நுரையை போக்குவதற்காக ரசாயனம் கலந்த நீர் தெளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக கட்சியைச் சேர்ந்த எம்.பி பர்வேஷ் டெல்லி நீர்வாரிய இயக்குனர் சஞ்சய் சர்மாவிடம் ஒரு சவால் விட்டார். அதாவது யமுனை நதியில் விஷம் கலந்திருப்பதாகவும் மக்கள் இதில் குளித்தால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பிரச்சனை ஏற்படும் எனவும் கூறினார். இதனால் அதிகாரி சஞ்சய் நதியில் எந்தவித நச்சும் இல்லை என்பதை நிரூபித்து காட்டுவதற்காக நதியில் குளித்து காண்பித்துள்ளார்.
மேலும் ஆற்றில் குளித்த அதிகாரி சஞ்சய் நதியில் எந்தவிதமான நச்சும் கலக்கப்படவில்லை எனவும், எம்பி பொய்யான தகவலை கூறுகிறார் என்றும் கூறினார். அதோடு ஆற்றில் விஷம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காக தான் குளித்ததாகவும், நதியில் தெளிக்கப்பட்ட ரசாயனம் உணவு பதப்படுத்துதல் மற்றும் அழகுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனம் என்றும் கூறியுள்ளார்